உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நேர்நிலைக்குக் கொண்டுவந்து ஆரோக்கியத்தைத் தரக்கூடிய மருத்துவ முறையாக அக்குபங்சர் விளங்குகிறது. ‘அக்குபங்சர்’ என்பது லத்தீன் மொழியில் அகுஸ் (ஊசி), பங்சர் (குத்துதல்) என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல்.
ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் ஏற்பட்ட அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபங்சரின் அடிப்படை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அக்குபங்சர் ஊசியை செலுத்தி உள்ளுறுப்புகளுக்கு ஆற்றல் வழங்குகிறோம்’’ - அக்குபங்சர் மருத்துவ முறையின் அடிப்படையுடன் பேச ஆரம்பிக்கிறார் அக்குபங்சர் மருத்துவர் டி.என்.பரிமளச்செல்வி மோகன்குமார்.
``அவரவர் உடலில் உள்ள வர்ம இடங்களின் புள்ளிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுவதாலும், பக்கவிளைவுகளற்ற முறை என்பதாலும் பெரியவர்கள், சிறுவர்கள் என்ற வயது வித்தியாசம் இந்த சிகிச்சை முறைக்கு இல்லை. குறிப்பாக, அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு, அவர்கள் ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்துவதில்லை.
நீரிழிவு நோயைப் பொறுத்தவரை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் இருக்கிறார்கள். படிப்படியாக ஊசி போடும் நிலையில் இருப்பவர்களை மாத்திரைக்கு மாற வைப்போம்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, மாத்திரைகளின் அளவையும் படிப்படியாக குறைத்து மருந்தில்லா நிலைக்குக் கொண்டு வருவோம். இவ்வாறு படிப்படியாகத்தான் மருந்துகளை குறைப்போமே தவிர, கண்டிப்பாக அலோபதி மருந்துகளை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்த மாட்டோம்.
பொதுவாக எந்தவொரு சிகிச்சை முறையைப் பின்பற்றினாலும் நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் நோயை குணப்படுத்த முடியும். செரிமானக் கோளாறு மூல காரணமாவதால் உணவை நன்கு உமிழ்நீரில் கரையும் வரை மென்று உண்பதை வலியுறுத்துகிறோம்.
தொடர்ந்து அக்குபங்சர் சிகிச்சையை எடுத்து வரும் நீரிழிவு நோயாளிகள் பக்கவிளைவுகளான மலச்சிக்கல், நரம்புமண்டல பாதிப்பு, பார்வை பாதிப்பு போன்றவற்றிலிருந்து எளிதில் விடுபடலாம்’’ என மாற்று மருத்துவத்துக்கு மாறுகிறவர்களுக்கான ஆலோசனைகளையும் முன் வைக்கிறார் பரிமளச்செல்வி.
டைப் 1 நீரிழிவில் குறையவோ கூடவோ செய்யும் ரத்த சர்க்கரை அளவுக்கு ஏற்ப இன்சுலின் மருந்தின் அளவு மாறும். ஊசி போட்டுக் கொள்வதை நிறுத்தினால், விரைவிலேயே மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
என்ன ஆகும்?
இன்சுலினைச் சார்ந்துள்ள டைப் 1 நீரிழிவு நோயாளிகள் ஓாிரு நாட்கள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் ரத்தசர்க்கரை அளவு எகிறிவிடும். தொடர்ந்து ஒரு வாரம் வரை போட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் கோமா நிலைக்குச் சென்றுவிடுவர். மரணம் சம்பவிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் ஆபத்தான நிலையை அடையக்கூடும்.
அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு, அவர்கள் ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்துவதில்லை.
- இந்துமதி
நன்றி : "குங்குமம் டாக்டர்" 16 ஜூன் 2016.
http://www.kungumam.co.in/docArticalinnerdetail.aspx?id=1224&id1=112&issue=20160616
Recent Comments